Advertisement

Responsive Advertisement

கண்ணன் கதை - 2 - பி.என்.பரசுராமன்


முதல் பிள்ளை பிறந்தது. பொய் சொல்ல, பயந்த வசுதேவர் தனது வாக்கைக் காப்பாற்றுவதற்காக கீர்த்திமான் என்னும் அந்தப் பிள்ளையைத் தூக்கிக் கொண்டு கம்சனிடம் போனார்.

குழந்தையைப் பார்த்தான் கம்சன். உடனே யாரும் எதிர் பாராத காரியத்தைச் செய்தான். வசுதேவரின் தியாக புத்தியும் சத்தியவாக்கும் அவனுக்கு மகிழ்ச்சி அளித்தன. ‘‘வசுதேவரே! இது முதல் குழந்தைதானே? இதனால் எனக்கு பயமில்லை. எட்டாவது குழந்தை பிறக்கட்டும். பார்க்கலாம். இந்தக் குழந்தையைக் கொண்டு போங்கள்!’’ என்று சொல்லி, அந்தக் குழந்தையைக் கொல்லாமல் அவரிடமே தந்து வழியனுப்பி வைத்தான்.


கம்சனின் இந்தக் கருணையைக் கண்டார் நாராயண பட்டத்திரி. ‘குருவாயூரப்பா! கருணை என்னும் குணத்துக்கு என்ன சிறப்பு பார்த்தாயா? ஏதோ ஒரு வேளையில் அது துஷ்டர்களின் புத்தியில் கூடப் புகுந்து விடுகிறதே?’ என நாராயணீயத்தில் கேட்கிறார்.

கம்சன் மனதில் புகுந்த கருணையை விரட்டியடிக்க அதோ, ஒரு புண்ணியவான் கிளம்பிவிட்டார். கம்சன் உள்ளத்தில் கருணை பிறந்த அந்தக் கணத்திலேயே, ஆகாய வழியாகக் கையில் வீணையுடனும் வாய் நிறைய நாராயண நாமத்துடனும் போய்க் கொண்டிருந்த நாரதர் வெகு வேகமாக கம்சனிடம் ஓடோடி வந்தார்.

‘‘கம்சா! உன்னை அறிவாளி என்று நினைத்தேன். ஆனால், நீ முட்டாளாக இருக்கிறாயே. உன்னைச் சுற்றிச் சூழ்ந்து எத்தனை அபாயங்கள் வலம் வருகின்றன என்று தெரியுமா? தேவகி, வசுதேவர், கோகுலத்தில் உள்ள யசோதையின் கணவர் நந்தகோபர், கோபர்கள், கோபிகைகள் ஆகியோர் எல்லாரும் தேவர்களின் அம்சங்கள். கம்சனான நீயும் உன்னைச் சார்ந்தவர்களும் அரக்கர்கள். உங்கள் அனைவரையும் வதம் செய்து பூமியின் பாரத்தைக் குறைப்பதற்காக, ஸ்வாமி, வசுதேவரின் குழந்தையாக அவதரிக்கப் போகிறார். இதெல்லாம் அவர் நடத்தும் நாடகம். பார்த்து நடந்து கொள்வது உன் கையில்தான் இருக்கிறது. நான் வருகிறேன்!’’ என்று எச்சரித்துவிட்டு நாரதர் அங்கிருந்து கிளம்பினார்.

வஞ்சனை நிறைந்த கம்சனின் உள்ளம், சஞ்சலம் அடைந்தது. எனவே, அவன் வேறொரு முடிவுக்கு வந்தான். உடனே வசுதேவரையும் தேவகியையும் சிறையில் அடைத்து விலங்கு போட்டான். அதன் பிறகு அவர்களுக்குப் பிறந்த ஒவ்வொரு குழந்தையையும், ‘இது என்னைக் கொல்ல வந்ததோ?’ என்று பயந்து உடனுக்குடன் அதைக் கொன்றான். தொடர்ச்சியாக, முதல் குழந்தை உட்பட இவ்வாறு ஆறு குழந்தைகள் கொல்லப்பட்டன.

இப்படி நடக்கும் என்று நாரதருக்குத் தெரியாதா? பிறகு அவர் ஏன் இப்படிச் சொன்னார்?

கம்சனால் கொல்லப்பட்ட அந்த ஆறு குழந்தைகளும் போன பிறவியில், மரீசி என்பவரின் பிள்ளைகள். பிரம்மதேவரின் சாபத்தால் அவர்கள் அசுரக் குழந்தைகளாகப் பிறந்தனர். அவர்களது சாபத்தை நீக்கி அருள் புரியவே அவர்களை தேவகியின் கருவில் தோற்றுவித்து, கம்சனால் கொல்லப்பட்டு சாப விமோசனம் வழங்கத் திருவுள்ளம் கொண்டார் நாரதர். தேவகியின் குழந்தைகள் ஆறு பேரும் கம்சனால் கொல்லப்பட்டதற்கு இதுவே காரணம்.

ஏழாவது கருவைச் சுமந்தாள் தேவகி. 

- தொடரும்…

நன்றி - சக்தி விகடன் 25-06-2006

கருத்துரையிடுக

0 கருத்துகள்