Advertisement

Responsive Advertisement

கண்ணன் கதை - 16 - பி.என்.பரசுராமன்

இறக்கி விடேன்!

கண்ணன் அந்த வீட்டில் வெகு ஜாக்கிரதையாக நுழைந்தான். உடன் வந்தவர்களும் ஓசை எழுப்பாமல் அவனைப் பின்தொடர்ந்தனர். கதவு முழுவதுமாகத் திறந்து இருந்ததால், எல்லோரும் ஒன்றாகப் போய் வழக்கப்படி உறியை நெருங்கினர்.

‘வீட்டில் யாரும் இல்லை’ என்பது அவர்களது எண்ணம். ஆனால், இவர்களது வருகையை எதிர்பார்த்து, கதவைத் திறந்து வைத்துவிட்டு அதன் பின்னால் ஒளிந்திருந்து இவர்களது செயல்களைக் கவனித்தாள் அந்த வீட்டு கோபிகை. ‘உறியில் கை வைக்கட்டும். தப்ப முடியாதபடி பிடித்து விடுவது!’ என்று அவள் தீர்மானித்தாள்.

இங்கும் உறி, உயரத்திலேயே இருந்தது. முன்பு போலவே, பலகைகளை அடுக்கி அதன் மேல் ஏறிய கோபாலச் சிறுவர்கள் ஒருவர் தோளில் மற்றொருவர் ஏறி நிற்க... வழக்கம்போல் ஏறி உறியைப் பிடித்தான் கண்ணன்.

‘இதுதான் நல்ல சந்தர்ப்பம். இல்லாவிட்டால், தப்பித்து விடுவார்கள்’, என்றெண்ணிய கோபிகை, கண்ணனையும் அவன் குழுவினரையும் நெருங்கினாள்.


‘‘கண்ணா! கோபிகை வந்து விட்டாள்!’’ எனக் கூச்சலிட்ட கோபாலச் சிறுவர்கள் அப்படியே வெளியேறி ஓடிவிட்டனர். அவர்கள் தோள் மீது ஏறி, உறியைப் பிடித்த கண்ணன், அப்படியே தொங்கினான்.

‘வசமாக அகப்பட்டு விட்டான். இவன் கீழே இறங்க முடியாது!’ என்று சந்தோஷத்துடன் கண்ணனை நெருங்கி, தன் இடுப்பில் கை வைத்தபடி நிமிர்ந்து பார்த்து, ‘‘யாரடா நீ?’’ என்று மிரட்டல் குரலில் கேட்டாள்.

‘இதைத் தெரிந்து கொள்ளத்தான் வேதங்களும் உபநிடதங்களும் சாஸ்திரங்களும் என்னை ஆராய்கின்றன. இதை இவ்வளவு சுலபமாகக் கேட்கிறாளே இவள்!’ என்று நினைத்த கண்ணன் சொன்னான்: 

‘‘பலராமன் தம்பி!’’

‘‘எனது வீட்டுக்குள் ஏன் வந்தாய்?’’

‘‘எங்கள் வீடு என்று நினைத்து விட்டேன்!’’

‘‘நல்ல பதில்தான். சரி, உறியில் உள்ள வெண்ணெய்ப் பாத்திரத்தில் உனக்கு என்ன வேலை?’’

‘‘அம்மா... சொன்னால் நம்பமாட்டீர்கள். எங்களது கன்றுக்குட்டியைக் காணோம். தேடிக் கண்டுபிடிக்கச் சொன்னாள் என் தாயார். எல்லா இடங்களிலும் தேடி விட்டேன். காணோம். ஒருவேளை இந்த உறியில் இருக்குமோ என்னவோ? இங்கும் தேடிப் பார்க்கலாம் என்று ஏறினேன்!’’

(கண்ணனுக்கும் கோபிகைக்கும் இடையே நடந்த இந்த உரையாடலை நினைத்தாலே போதுமே. தனியாக வேறு தவம் வேண்டுமா என்கிறார் தலை சிறந்த பக்தரான லீலாசுகர்).

‘‘இறங்கு!’’ என்றாள் கோபிகை.

‘‘இறக்கி விடேன்!’’ - கண்ணன்.

‘‘இதற்கு மட்டும் என் உதவி வேண்டுமா?’’

‘‘ஆமாம்!’’

‘எல்லோரையும் உயர்ந்த நிலைக்கு ஏற்றி விடுவது எனது வேலை. உயர்ந்த நிலையில் இருந்து தாழ்ந்த நிலைக்கு இறக்கி விடுவது மனிதர்களது வேலை’ என்று நினைத்தானோ கண்ணன்?

எது எப்படியோ, நாம் பள்ளத்தில் விழுந்து விடாமல், நம்மைக் கைதூக்கி உயர்த்த வேண்டும் என்று மாயக்கண்ணனிடமே வேண்டுவோம்.

-நிறைந்தது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்