பாற்கடலா! மோர்க்கடலா!
ஆடிய களைப்பால் தூங்குபவனைப் போல, அங்கேயே படுத்துவிட்டான் கண்ணன். பொய்த் தூக்கம்.
‘பாவம் குழந்தை. தூங்கட்டும். நாம் வேலையைப் பார்ப்போம்!’ என்று, வெண்ணெயை ஒரு பானைக்குள் போட்டு மூடிய யசோதை, அதன் பக்கத்திலேயே தயிரையும் மோரையும் வைத்து விட்டு அடுப்பங்கரைக்குப் போனாள்.
அதற்காகக் காத்திருந்தவன் போல, பொய்த் தூக்கம் தூங்கிய ஸ்வாமி, மெள்ளக் கண் திறந்து பார்த்தான். அதே இடத்தில் கிடந்தபடி கையை நீட்டிப் பானையில் இருந்த வெண்ணெய் முழுவதையும் விழுங்கினான். பானை காலியானதும் அடுத்த பானையை எட்டிப் பார்த்தான்.
‘நான் உலாவும் இந்த ஆயர்பாடியில், பால் வற்றிய பசுக்கள் கூட காமதேனுவாக மாறி, ஏராளமாகப் பால் பொழிகின்றன. அப்படியும் என் தாயாருக்கு ஏன் இந்த புத்தி? தயிரில், ஏன் தண்ணீரைக் கலந்து மோராக வைத்திருக்கிறாள்?’ என்று கோபமாக எட்டி உதைத்தார் ஸ்வாமி. பானை உடைந்து, அறை முழுவதும் மோர் பரவியது.
சத்தம் கேட்டு யசோதை ஓடி வந்தாள். ஆஹா! அவள் கண்ட காட்சியை என்னவென்று சொல்ல? சனகாதி யோகிகளுக்கும் நாரதாதி முனிவர்களுக்கும் கிடைக்காத அற்புத தரிசனம் அப்போது யசோதைக்குக் கிடைத்தது. அவர்களெல்லாம் ஸ்வாமியை, பாற்கடலில் பள்ளி கொண்ட பரமனாகப் பார்த்தார்கள். ஆனால், யசோதையோ, உடைந்த குடத்துடன் அறை முழுவதும் பரவியிருக்கும் மோர்க்கடலின் நடுவில் முழுகிக் கிடந்த ஸ்வாமியைப் பார்த்தாள்.
இந்தக் கருத்தைச் சொல்லும் பாடல்:
ஓராதவன் போல் உறங்கி அறிவுற்றுத்
தாரார் தடந்தோள்கள் உள்ளளவுங் கைந்நீட்டி
ஆராத வெண்ணெய் விழுங்கி அருகிருந்த
மோரார் குடமுருட்டி முன்கிடந்த தானத்தே
ஓராதவன் போற்க் கிடந்தானைக் கண்டவளும்
தேயும் நிலவே! தேயாத நிலவைப் பார்க்க வா!
கண்ணன் செய்த அனைத்தையும் மன்னித்தாள் யசோதை. பாசமும் பரிவும் காட்டினாள். எத்தனையோ பாக்கியங்களை யசோதைக்கு வாரி வழங்கிய கண்ணனின் அருளுக்கு, யசோதையின் பரிவு ஈடாகாது என்பது மகான்களின் கருத்து. எனவே, இப்படிப்பட்ட கண்ணனைப் பல விதங்களிலும் பக்திப் பரவசத்துடன் அனுபவித்திருக்கிறார்கள் மகான்கள் பலர். அதில் ஒன்று.
- தொடரும்…
நன்றி - சக்தி விகடன் 25-06-2006

0 கருத்துகள்