"நியூக்ளியர் குடும்பம்" என்ற சொல் அறிவியலிலிருந்து வந்தது. அணுவின் உட்கரு (Nucleus) போல, கணவன்–மனைவி மற்றும் அவர்களது பிள்ளைகள் மட்டும் இணைந்து வாழும் சிறிய குடும்பம் என்ற பொருள். ஆனால், பெற்றோர்களையும் மற்ற எல்லா உறவுகளையும் பிரிந்து வாழ்வது உண்மையில் தேவையா?
முன்னொரு காலத்தில் ஒரே வீட்டில் பெரியப்பா, சித்தப்பா, அத்தை, மாமா என்றெல்லாம் அனைவரும் ஒன்றாக வாழ்ந்தார்கள். இதை தற்பொழுது பார்க்க வேண்டும் என்ற ஆசை இருந்தால் விசு அவர்களின் திரைப்படங்களை பாருங்கள். நேரில் வாய்ப்பேயில்லை.
சமீபத்திய கணக்கெடுப்பின்படி, தமிழகம் மற்றும் கேரளாவில் தான் முதியோர்கள் அதிக அளவில் தனியாக விடப்பட்டுள்ளனர். அவர்களது பிள்ளைகள் வெளிநாடுகளிலோ அல்லது பெரிய நகரங்களிலோ வேலைக்குச் சென்று விட்டார்கள். சென்னை, பெங்களூரு போன்ற நகரங்களில் வேலை வாய்ப்புகள் அதிகம் என்பதால், பல தம்பதிகள் பெற்றோர்களை ஊரிலோ அல்லது முதியோர் இல்லங்களிலோ விட்டுவிட்டு, அலுவலகத்திற்கு அருகில் உயர்ந்த மாடிக் குடியிருப்புகளில் தனியே வாழ்கிறார்கள்.
பெற்றோரை முதியோர் இல்லத்தில் சேர்த்துவிட்டு, மாதத்திற்கு ஒருமுறை கூடச் சென்று பார்க்காமல், வருடத்திற்கு ஒருமுறையே சந்திக்கும் பிள்ளைகள் இன்று சாதாரணமாகக் காணப்படுகிறார்கள். சென்னைக்கு அருகிலுள்ள அம்பத்தூரில் உள்ள ஒரு முதியோர் இல்லத்தில் மட்டும் 200 பேர் வசிக்கிறார்கள். அவர்களுக்காக வருடத்தில் ஒருநாள் Orientation Day நடத்தப்படுகிறது. அன்று மட்டுமே அவர்களது பிள்ளைகள், உறவினர்கள் வந்து பார்த்துச் செல்கிறார்கள். இதெல்லாம் காலத்தின் கொடுமை. சிலர் வெளிநாடுகளில் வேலை செய்து பணம் அனுப்புகிறார்கள்; அது வேறு விஷயம்.
தம்பதிகளின் பார்வையில், சுதந்திரம், பிள்ளைகளின் படிப்பு, வார இறுதி கொண்டாட்டம் போன்றவற்றில் பெற்றோர்கள் ஒரு தடையாகக் கருதப்படுகிறார்கள். சில நேரங்களில் மாமியார்–மருமகள் பிரச்சினைகளும் காரணமாகின்றன.
ஆனால் ஒரு முக்கியமான கேள்வி நம்முன் எழுகிறது. இப்படி வளர்கின்ற பிள்ளைகள் ஒழுக்கம், பண்பு, மரியாதை போன்றவற்றை கற்றுக்கொள்கிறார்களா?
பெரியவர்களுடன் சேர்ந்து வாழும் குழந்தைகள், தாத்தா–பாட்டியின் அனுபவங்களிலிருந்து வாழ்க்கை நெறிகளையும் நல்ல பண்புகளையும் கற்றுக்கொள்கிறார்கள். அவர்களின் பாசமும் பேரக்குழந்தைகளுக்கு கிடைக்கிறது.
இன்றைய சமுதாயத்திற்கு உண்மையில் தேவை நல்ல பிள்ளைகள்தான்.


0 கருத்துகள்