இசை அமைப்பாளர் விஜயபாஸ்கர் பிறந்தநாள் இன்று! - 1970-களில் தமிழ் திரைப்பட இசைக்கு மெருகு சேர்த்தவர்களில் ஒருவர் விஜயபாஸ்கர். கே.ஜே.யேசுதாஸ் பாடிய ‘எனது வாழ்க்கைப் பாதையில்’ என்ற மோகம் முப்பது வருஷம் என்ற படத்தின் பாடல், எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மயங்குகிறாள் ஒரு மாது படத்தில் பாடிய ‘சம்சாரம் என்பது வீணை’ போன்ற பாடல்களால் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்த விஜயபாஸ்கர் கன்னடத் திரைப்பட உலகின் முக்கியமான இசை அமைப்பாளர்.
கமலஹாசன், ரஜினிகாந்த் நடித்த ‘ஆடு புலி ஆட்டம்’ திரைப்படத்தில், இவரது இசை அமைப்பில் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடிய ‘வானுக்குத் தந்தை எவனோ’ , ‘உறவோ புதுமை’ போன்ற பாடல்கள் புகழ்பெற்றவை.
‘உங்கள் விருப்பம்’ திரைப்படத்தில் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், வாணிஜெயராம் ‘என்ன மகராணி அழகு, அழகு…அழகு…..’ ஆண் பிள்ளை சிங்கம்’ படத்தில் பி.சுசீலா பாடும் ‘மயக்கம் குழப்பம், கல்யாணமாம் கல்யாணம் படத்தில் எஸ்.ஜானகி பாடும் ‘இளமை நாட்டிய சாலை’ போன்றவை இவரது இசையமைப்பில் புகழ் பெற்ற பாடல்கள்.
கே.பாலசந்தர் இயக்கத்தில் ரஜனிகாந்த் நடித்த ‘தப்புத்தாளங்கள்’ படத்துக்கும் விஜயபாஸ்கர்தான் இசையமைத்தார். இப்படத்தில் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடும் ‘அட என்னடா பொல்லாத வாழ்க்கை’ பாடலுக்கு வாழ்க்கையின் வெறுப்பை உணர்த்தும் இசையைத் தந்திருந்தார் விஜயபாஸ்கர். 1975-இல் வெளியான ‘தொட்டதெல்லாம் பொன்னாகும்’ திரைப்படத்தில் பி.சுசீலா, எஸ்.பி.பாலசுப்பிரமணியம், பாடும் பனிமழை மேகங்கள் பொழிகின்ற குளிரினில் திருக்குறள் படிக்கட்டுமா’, 1976-இல் வெளியான ‘காலங்களில் அவள் வசந்தம்’ படத்தில் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடிய ‘முதன்முதல் வரும் சுகம் இதுவென’ , ‘காலமடி காலம்’ படத்தில் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், வாணிஜெயராம் பாடிய ‘எனக்கொரு உதவி செய் கண்ணா கண்ணா’ பாடல்களில் சுகந்தத்தின் சுவையை அள்ளித்தந்தவர் விஜயபாஸ்கர்.
600-க்கும் மேற்பட்ட கன்னடம், தமிழ், தெலுங்கு மட்டுமல்லாமல் மலையாளப் படங்களிலும் இசையமைத்தவர் இவர். அடூர் கோபாலகிருஷ்ணனின் ‘மதிலுகள்’, ‘விதேயன்’ போன்ற படங்களுக்கும் இசையமைத்தவர்.
7.9.1931 அன்று பிறந்த இவர் 3.3.2002 அன்று தனது 70-ஆவது வயதில் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் மரணமடைந்தார்.
இவர் இசையமைத்த மேலும் சில தமிழ்ப் படங்களின் பட்டியல்:
எங்கம்மா சபதம் [1974]
உங்க வீட்டு கல்யாணம் [1975]
யாருக்கு மாப்பிள்ளை யாரோ [1975]
பேர் சொல்ல ஒரு பிள்ளை [1978
சௌந்தர்யமே வருக வருக
ராஜாவுக்கேத்த ராணி
நீதியா நியாயமா
தி இந்து தமிழ் தீபாவளி மலர் இதழிலிருந்து விவரங்கள் திரட்டப்பட்டது.
நன்றி - வானொலி மற்றும் சினிமாவின் பொற்கால நினைவலைகள்...


0 கருத்துகள்