2022 செப்டம்பர் மாதம், பர்கினா ஃபாசோவில் ஒரு புதிய குரல் கணீரென்று ஒலித்தது. அது, "நான் அதிகாரத்துக்கு ஆசைப்பட்டவன் அல்ல. என் நாட்டு மக்கள் யாரிடமும் அடிமையாக இருக்கக்கூடாது, என் நாட்டு மக்களுக்காக என் உயிரையும் கொடுக்கத் தயார்" என்று முழங்கிய இப்ராஹிம் ட்ரொரேவின் குரல். கூடியிருந்த மக்கள் பலத்த கரகோஷத்துடன் கைத்தட்டி அவரை "சங்காரா மறுபடியும் பிறந்துள்ளார்" என்று உற்சாகமாக வரவேற்றனர். தாமஸ் சங்காரா படுகொலை செய்யப்பட்டு, சுமார் 40 ஆண்டுகளுக்குப் பிறகு, அவர் ஏற்றிய புரட்சித் தீ மீண்டும் ட்ரொரேவின் கைகளில் ஒரு தீப்பந்தமாக ஒளிர்கிறது. இந்த இடத்தில் அவர் சொன்ன அந்த வார்த்தைகளை தான் நினைக்க வேண்டும். “புரட்சியாளர்கள் கொல்லப்படலாம். ஆனால், அவர்களின் எண்ணங்களை யாராலும் கொல்ல முடியாது.”
இளமைக்காலம் மற்றும் கல்வி
1988 ஆம் ஆண்டு பிறந்த இப்ராஹிம் ட்ரொரே, தாமஸ் சங்காரா படுகொலை செய்யப்பட்டு ஒரு வருடம் கழித்து பிறந்தார். அவர் ஒவகடூகோ பல்கலைக்கழகத்தில் (University of Ouagadougou) அறிவியலையும் புவியியலையும் (science and geology) படித்துப் பட்டம் பெற்றார். இந்த படிப்பானது, அவருக்கு நாட்டின் வளங்கள் மற்றும் நில அமைப்பு குறித்த ஆழமான புரிதலை அளித்து அவரின் உள்ளே தீக்கங்கை உருவாக்கியது.
பல்கலைக்கழகப் படிப்பை முடித்த பின், அவர் பர்கினா ஃபாசோ இராணுவத்தில் சேர்ந்தார். "கோப்ரா" (Cobra) என்றழைக்கப்படும் சிறப்புப் படையில் (special forces unit) அவர் இருந்ததாகச் சில தகவல்கள் கூறுகின்றன. 2022 செப்டம்பரில் நடந்த இராணுவப் புரட்சியின் மூலம், முன்னாள் இடைக்காலத் தலைவர் பால்-ஹென்றி டாமிபாவிடமிருந்து அதிகாரத்தைக் கைப்பற்றினார். அதுவரை பிரான்ஸ் நாட்டின் அடிமையாக தான் இருந்தது பர்கினா ஃபாசோ. இவர் பதவியேற்ற உடன் தன் நாட்டின் வெளிநாட்டு கடன்களை அடைக்க முடியாது என்று பகிரங்கமாக அறிவித்து அதற்கான காரணமாக தன் நாட்டின் கனிம வளங்களை அந்த நாடுகள் சுரண்டியதை குறிப்பிட்டிருந்தார். அதிகமான அளவிற்கு இவர் வெளி உலகத்திற்கு தெரிந்ததே சமீபத்திய ரஷ்ய அதிபருடனான சந்திப்பு.
ட்ரொரே ஆட்சிக்கு வந்ததிலிருந்து, பிரான்ஸ் மற்றும் பிற மேற்கு நாடுகளுடனான உறவுகளைக் குறைத்துக் கொண்டார். இதற்கு ஒரு முக்கிய காரணம், பர்கினா ஃபாசோவில் மத தீவிரவாத தாக்குதல்களைக் கட்டுப்படுத்த மேற்கு நாடுகள் போதிய உதவிகளைச் செய்யவில்லை மற்றும் நாட்டின் கனிம வளங்களை சுரண்டுதல். மாறாக, அவர் ரஷ்யா சீனா போன்ற கம்யூனிச நாடுகளுடன் புதிய உறவுகளை ஏற்படுத்திக் கொள்ள முயற்சி செய்தார்.
சமீபத்தில், ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் நடைபெற்ற ரஷ்யா-ஆப்பிரிக்கா உச்சி மாநாட்டில் (Russia-Africa Summit) ட்ரொரே, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினைச் சந்தித்தார். இச்சந்திப்பின் முக்கிய நோக்கம் ராணுவ மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை (military and economic cooperation) வலுப்படுத்துவது. குறிப்பாக, பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராட ரஷ்யாவின் ராணுவ உதவி மற்றும் பயிற்சி பெறுவது குறித்து இருவரும் விவாதித்தனர். பர்கினா ஃபாசோவில் உள்ள தங்கச் சுரங்கங்கள் மற்றும் பிற இயற்கை வளங்கள் குறித்தும், அவற்றை வெளிநாட்டு ஆதிக்கமின்றி நிர்வகிப்பது குறித்தும் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன.
இச்சந்திப்பில் ரஷ்ய அதிபரின் எதிரில் அவர் பேசிய பேச்சு தான் தான் இந்தக் கட்டுரை எழுதுவதற்கு தூண்டுகோலாயிருந்தது. அதற்கான விடியோ லிங்க் இக்கட்டுரையின் இறுதியில் இணைக்கிறேன். அதன் கமென்டுகளையும் பாருங்கள். அவர் சொன்னதை அப்படியே பகிர்கிறேன் எப்பேர்ப்பட்ட தலைவன் இவன் என புரியும்.
“நாட்டின் பாதுகாப்பு பலப்படுத்த வேண்டும் அதில் மாற்று கருத்தில்லை. பாதுகாப்பிற்குப் பிறகு, கல்விதான் எங்களுக்கு மிகவும் ஆர்வமுள்ள பகுதி. நான் உங்களின் (ரஷ்ய அதிபரை பார்த்து) பல்கலைக்கழகம் சென்று பார்த்தேன் உங்களிடம் கேட்பது ஒன்று தான் குறிப்பாக அறிவியல். எங்கள் இளைஞர்களுக்கு அறிவியலில் பயிற்சி அளிக்க எங்களுக்கு உங்கள் உதவி தேவை. இதன் மூலம் எங்கள் நாட்டிற்கு தேவையான ராணுவ தளவாடங்கள் மற்றும் தொழில் துறைக்குத் தேவையான இயந்திரங்களை உருவாக்கும் வல்லமை எங்களால் பெற முடியும். நாங்கள் சொந்தக் காலில் நிற்க முடியும். இதுதான் ஆப்பிரிக்காவில் நாங்கள் வளர்ச்சி அடைய ஒரே வழி.”
என் தந்தையின் கோட்பாடு இதுதான் அறிவினை விசாலமாக்கி அதனையே ஆயுதமாக்குவோம். எழுத்தறிவித்துவிட்டால் அவர்களுக்கு என்ன தேவையோ அதனை அவர்களே தயாரித்துக் கொள்வார்களல்லவா. அதோடு ஒரு பெரிய வல்லரசு அதிபரின் எதிரில் தைரியமாக அமர்ந்து கொஞ்சம் கூட நடுக்கமின்றி எங்கள் நாட்டு மக்களுக்கு கல்வி கற்றுத் தாருங்கள் என கேட்பதற்கு சத்தியமாக தைரியம் வேண்டும். நாங்கள் உங்களிடமும் அடிமையாகக் கூடாது என்ற அவரின் கொள்கைக்கு ஒரு பெரிய சல்யூட். இந்த நிகழ்விற்குப் பின் தான் இவரைப் பற்றி தெரிந்து கொள்ள முற்பட்டேன்.
இந்தச் சந்திப்பு, ட்ரொரேவின் வெளிநாட்டுக் கொள்கையின் ஒரு முக்கிய அம்சத்தை வெளிப்படுத்துகிறது: மேற்கு நாடுகளின் ஆதிக்கத்திலிருந்து விடுபட்டு, சொந்த காலில் நிற்பது, யாருக்கும் அடிமையாக இருக்கக்கூடாது. இது, அவரது முன்னோடி தாமஸ் சங்காராவின் "சுயநிர்ணயம்" என்ற கொள்கையை ஒத்திருக்கிறது. புட்டின் உடனான இந்த நெருக்கம், பர்கினா ஃபாசோவின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் ரஷ்யா ஒரு முக்கியப் பங்களிப்பைச் செய்யக்கூடும் என்பதைக் காட்டுகிறது.
இப்ராஹிம் ட்ரொரே வெளிப்படையாக தன்னை ஒரு மார்க்சிஸ்ட், ஒரு புரட்சியாளர் என்று கூறிக் கொள்ளவில்லை என்றாலும், அவரது கொள்கைகள் மற்றும் பேச்சுகள் மார்க்சிய சிந்தனையின் சில கூறுகளைப் பிரதிபலிக்கின்றன. குறிப்பாக, தாமஸ் சங்காராவின் மார்க்சிச-லெனினிச கொள்கைகளை ட்ரொரே தனது அரசியல் வழிகாட்டியாகக் கருதுகிறார். மார்க்சிய கொள்கைகள் தற்காலத்தில் எந்த நாட்டிலும் பெரிய அளவில் எடுபடவில்லையென்றாலும், சில பேட்டிகளில் அவரின் கோட்பாடுகள் மார்க்சியத்தை ஒட்டியே இருக்கின்றன. அவற்றை கொஞ்சம் பார்ப்போம்.
ஏகாதிபத்திய எதிர்ப்பு (Anti-Imperialism): மார்க்சியத்தின் அடிப்படை கோட்பாடுகளில் ஒன்று ஏகாதிபத்தியத்தை எதிர்ப்பது. ட்ரொரே, பிரான்ஸ் மற்றும் பிற மேற்கு நாடுகளின் ஆதிக்கத்தை வெளிப்படையாக விமர்சிப்பது, இந்த ஏகாதிபத்திய எதிர்ப்பு நிலைப்பாட்டை உறுதிப்படுத்துகிறது. அவர் மேற்கு நாடுகளை குறிப்பாக பிரான்சு நாட்டை "நமது மக்களின் கழுத்தை நெரிக்கும் கயிறு" என்று வர்ணிப்பது, பொருளாதார மற்றும் அரசியல் அடிமைத்தனத்தை எதிர்க்கும் மார்க்சியக் கண்ணோட்டத்துடன் ஒத்துப்போகிறது.
சுயநிறைவு மற்றும் தேசியமயமாக்கல் (Self-sufficiency and Nationalization): ட்ரொரே, பர்கினா ஃபாசோவின் தங்கச் சுரங்கங்கள் போன்ற கனிம வளங்களை வெளிநாட்டு நிறுவனங்களிடமிருந்து மீட்டு, அரசு கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தார். இது, நாட்டின் கனிம வளங்களை மக்கள் நலனுக்காகப் பயன்படுத்துவதற்கான ஒரு முயற்சியாகப் பார்க்கப்படுகிறது. இந்த செயல், உற்பத்தி சாதனங்களை தேசியமயமாக்கும் மார்க்சியக் கொள்கையுடன் ஒத்திருக்கிறது.
மக்கள் சக்தி (People's Power): அவர் தனது ஆட்சியை "மக்கள் புரட்சி" என்று குறிப்பிடுகிறார். மேலும், "வாலன்டியர் ஃபோர்ஸ்" (Volunteers for the Defense of the Homeland) போன்ற தன்னார்வ அமைப்புகளை உருவாக்கி, பாதுகாப்புப் பொறுப்பை மக்களின் கைகளில் ஒப்படைத்தார். இது, மக்கள் இராணுவம் மற்றும் மக்கள் அதிகாரத்தை வலுப்படுத்தும் மார்க்சிய லெனினிச சிந்தனையை ஒத்துள்ளது.
வர்க்கப் போராட்டம் (Class Struggle): ட்ரொரேவின் பேச்சுக்கள், ஏழைகள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக ஒலிக்கின்றன. அவரது உரைகள், ஆப்பிரிக்காவின் இயற்கை வளங்களைச் சுரண்டும் மேற்குலக நிறுவனங்களை ஒரு வர்க்கமாக சித்தரிக்கின்றன. இந்தப் போராட்டம், மார்க்சியத்தில் கூறப்படும் வர்க்கப் போராட்டத்தின் நவீன வடிவமாகப் பார்க்கப்படுகிறது.
இது வெளிப்படையாக ஒரு மார்க்சிய புரட்சியாக இல்லாவிட்டாலும், அந்த சிந்தனையின் ஆழமான தாக்கம் ட்ரொரேவின் செயல்பாடுகளில் தெளிவாகக் காணப்படுகிறது.
"சின்ன நாட்டின் பெரிய குரல்" என்று இன்று உலகம் பர்கினா ஃபாசோவையும் இப்ராஹிம் ட்ரொரேவையும் மதிக்கிறது. வழக்கபோல் இவரை கொல்வதற்கு 22 முயற்சிகள் நடைபெற்றது, ஆட்சியை கவிழ்க்க பத்து முறை முயன்றிருக்கிறார்கள். அது அத்தனையையும் முறியடித்து வலம் வந்து கொண்டிருக்கும் இவர் ஒரு இளம், சக்திவாய்ந்த தலைவர் என்பதில் சந்தேகமில்லை.
வீடியோ காண... https://www.youtube.com/shorts/HHAax8FlLAw?feature=share



0 கருத்துகள்