ஒரு ஊர்ல ஒரு ராஜா இருந்தாராம். அவருக்கு கொஞ்சம் நல்ல மனசு. இரக்கமான மனசு. அன்றாடம் கண் தெரியாதோர் ஆயிரம் பேருக்கு உணவு அளித்து வந்தார். ஒருநாள் அந்த உணவில் பாம்பின் விஷம் கலந்து ஆயிரம் பேரும் இறந்து விடுகின்றனர். ராசாவின் மனசு பாடாய்பட்டது. புண்ணியம் சேரா விட்டாலும் பரவாயில்லை. இப்படி பாவத்தினை சேர்த்துக் கொண்டு விட்டோமே என்று வேதனைப் பட்டான். ஊர் ஊராய் சுற்றி அலைந்தான். ஒரு நாள் இரவில் ஒரு கிராமத்தினை வந்தடைந்தான். அவனை யாருக்கும் அடையாளம் தெரியவில்லை. மிகுந்த சோர்வாய் இருந்த அவன் ஒரு நல்ல பக்திமான் இருக்கும் வீட்டில் ஓய்வெடுக்க விரும்பினான்.
அங்குள்ளவர்களை விசாரித்த பொழுது சற்று தள்ளி உள்ள குடிசையினை காட்டி ‘இங்கு ஒரு சிறுவனும், சிறுமியும் உள்ளனர். அவர்கள் உடன்பிறந்தவர்கள். இந்த சிறு வயதிலேயே மிகுந்த பூஜை, பக்தி என்று இருப்பவர்கள். நீங்கள் அவர்கள் வீட்டு திண்ணையில் இன்று இரவு தங்கி ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள்’ என்றனர்.
அரசனும் அங்கு சென்றார். இரவும் சரி, விடியற்காலையும் சரி அந்த சிறுவனும், சிறுமியும் தியானம், பூஜை என்றிருந்தனர். வழக்கத்தினைக் காட்டிலும் அன்று அதிக நேரம் சிறுமி தியானத்தில் இருந்தாள். அப்பொழுது அவனது சகோதரன் 'அக்கா இன்று நீ மிக அதிக நேரம் தியானத்தில் இருந்தாய். ஏன்? வாசலில் ஒரு வழிப்போக்கர் உள்ளார். அவருக்கு நாம் ஏதாவது உணவு கொடுக்க வேண்டாமா?’ என்று கேட்டான்.
அந்த பெண்ணோ, “ஒரு விநோதமான குழப்பம் எமதர்மராஜனுக்கு ஏற்பட்டுள்ளது. ஒரு அரசன் தினமும் 1000 பேருக்கு உணவளித்து வந்துள்ளான். அந்த உணவில் பாம்பின் விஷம் கலந்து அந்த ஆயிரம் பேரும் இறந்துள்ளனர்.
எமதர்மராஜனின் குழப்பமே இந்த பாவக் கணக்கினை யார் மீது எழுதுவது? அந்த பாம்பினை தூக்கிப் பறந்த பறவையின் மீதா, இறுக்கத்தால் விஷம் கக்கிய அந்த பாம்பின் மீதா அல்லது அரசன் மீதா என்ற விவாதம் நடக்கிறது. இதனை கேட்டுக் கொண்டிருந்தால் என் தியான நேரம் கூடி விட்டது” என்றாள். இந்த விஷயம் தன்னைப் பற்றியதாக இருக்கவே அரசன் கூர்ந்து கவனித்தான்.
“என்ன முடிவு எடுத்தார்கள்?”- சிறுவன்
“இன்னமும் முடிவு எடுக்கவில்லை?” - சிறுமி
அரசன் அந்த சிறுவர்களிடம் நான் இன்றும், நாளையும் இந்த வாசல் திண்ணையில் தங்கிக் கொள்ளலாமா எனக் கேட்டான். அவர்களும் மகிழ்ச்சியுடன் 'சரி' என்றனர்.
என்ன முடிவு வருமோ என்ற கவலை அரசனுக்கு. ஊர் மக்கள் இவன் தங்குவதைப் பார்த்தனர். அவ்வளவுதான். ஊர் தான் என்ன வேண்டுமானாலும் பேசுமே. அந்த சிறுமி அழகாக இருப்பதால் இந்த வழிப்போக்கன் அங்கே தங்கி இருக்கிறான் என தவறாக பேசத் தொடங்கினர்.
மறுநாள் சிறுமி தியானம் முடித்து வந்தாள். பயத்துடன் காத்திருந்த அரசன் “குழந்தாய் இன்று எமதர்ம ராஜா என்ன முடிவு கூறினார்” என்று கேட்டார். அச்சிறுமி சொன்னாள் அந்த பாவம் எங்கள் கிராமத்தில் திண்ணையில் அமர்ந்து பேசிய நபர்களுக்கு பங்கிடப்பட்டுள்ளது. எனவே அடுத்தவரை தவறாக பேசுவது, கதை கட்டி விடுவது இவையெல்லாம் மற்றவர்களின் பாவத்தையும் சேர்த்து புரளி பேசுபவர் தலையில் கட்டி விடும். கவனம் தேவை.
நன்றி - மாலைமலர் 08-09-2025

0 கருத்துகள்