Advertisement

Responsive Advertisement

வாழ்க்கை என்ற புத்தகம் - 8 - ஜே.கிருஷ்ணமூர்த்தி


காலத்திற்கும் சிந்தனை ஓட்டத்திற்கும் இடையில் உள்ள உறவு என்ன என்று கண்டுபிடிக்கும்படி இந்தப் புத்தகம் சொல்கிறது. தெரிந்த விஷயத்திலிருந்து தெரிந்த இன்னொரு விஷயத்திற்குப் பயணிப்பதே சிந்தனையோட்டத்தின் இயல்பு. அது ஒரு இயக்கம். கடந்தகால நினைவுகள் நிகழ்காலத்தை சந்தித்து தங்களைப் புதுப்பித்துக் கொண்டு பயணத்தைத் தொடர்கின்றன. நேற்றிலிருந்து இன்று; இன்றிலிருந்து நாளை; என்று நகர்வது காலத்தின் இயக்கம். மனோரீதியான காலமும் உள்ளது. வலி என்றால் என்ன என்று எனக்குத் தெரியும். அது இனி எனக்கு வராது என்று நான் நம்புகிறேன்; அல்லது மீண்டும் வந்துவிடுமோ என்று நினைத்துக்கொள்கிறேன். இது கடந்தகாலம் நிகழ்காலத்தைச் சந்தித்து, தன்னை புதுப்பித்துக்கொண்டு எதிர்காலத்திற்குள் பிரவேசிக்கும் இயக்கம். கடிகாரம் காலத்தைக் காட்டுகிறது. உள்முகமான காலமும் உள்ளது. நீங்கள் ஏதோ நன்றாக இருக்க வேண்டும் என்று நம்புகிறீர்கள்; ஆனால் அப்படி இல்லை. ஆனாலும் நம்பிக்கை வைக்கிறீர்கள். நீங்கள் வன்முறையாளராக இருக்கிறீர்கள். ஆனால் அகிம்சையாளராக இருக்க வேண்டும் என்று நம்புகிறீர்கள். பேராசையும் பொறாமையும் உங்களிடம் இருக்கிறது. ஆனால் காலப்போக்கில் அவற்றிலிருந்து விடுபட்டுவிடலாம் என்று நம்புகிறீர்கள். எனவே காலம் என்றது கடந்தகாலம்-நிகழ் காலம்-எதிர்காலம் ஆகியவற்றினூடே நடைபெறும் இயக்கம். சிந்தனையும் கடந்தகாலத்திலிருந்தே-கடந்தகாலத்தில் நாம் சேகரித்த அறிவு, கடந்தகால நினைவுகள்-துவங்கும் இயக்கம். எனவே சிந்தனைதான் காலம்.

அடுத்த கேள்விக்கு பதில் சொல்வது இன்னும் கடினம். இவ்வளவு தூரம் வருவதற்கே உங்களிடம் நிறைய பொறுமை இருந்திருக்க வேண்டும். பொறுமை என்ற வார்த்தையைக் குறிப்பிட்ட ஒரு அர்த்தத்தில் நான் பயன்படுத்துகிறேன். காலம் அற்ற ஒரு நிலைதான் பொறுமை. பொதுவாக பொறுமையின் அர்த்தம் என்ன? மெதுவாக செயல்படு, அவசரப்படாதே, அவகாசம் எடுத்துக்கொள், அலட்டிக்கொள்ளாதே,. மற்றவர்களுக்கும் அவர்களது கருத்தை எடுத்துச் சொல்ல வாய்ப்புக் கொடு. . . என்றெல்லாம் சொல்வதுண்டு. பொறுமை என்று சொல்வது இப்படிப்பட்ட அர்த்தத்தில் அல்ல. நாம் சொல்லும் பொறுமை, காலத்தை மறந்த நிலை காலத்தை மறந்தால் உங்களால் நன்றாகப் பார்க்க முடியும்; உன்னிப்பாக கவனிக்க முடியும். காலத்தின் வாயிலாக கவனித்தீர்களானால் நீங்கள் பொறுமையிழந்து விடுவீர்கள். இந்த அத்தியாயத்தைப் படிக்க உங்களுக்குப் பொறுமை தேவை. அச்சத்தின் ஆணி வேர் காலம். காலம் என்பது சிந்தனை. சிந்தனை ஓட்டம் இருக்கும் வரை அச்சமும் உங்களுக்குள் இருந்தே தீரும்.

காலத்திற்கு ஒரு முடிவுகட்ட முடியுமா என்ற அடுத்த அத்தியாயம் கேட்கிறது.

- தொடரும்...

தமிழில்: அரவிந்தன் 

கருத்துரையிடுக

0 கருத்துகள்