ஒழுங்கின்மை, ஒழுங்கு, அதிகாரம் ஆகியவை அடங்கிய முதல் அத்தியாயத்தைப் படித்திருக்கிறீர்கள்; விவாதித்திருக்கிறீர்கள் என்கிறது இப்புத்தகம். வாழ்க்கை என்பது உறவு என்கிறது அடுத்த அத்தியாயம். வாழ்க்கை என்பது உறவின் செயல்வடிவம். உங்களுக்கு நெருக்கமாக இருப்பவர்களுடன் உங்களுக்கு இருக்கும் உறவு மட்டுமல்ல. மனித இனம் முழுவதுடனும் உங்களுக்கு உறவு இருக்கிறது. இதர மனிதர்கள், எங்கு வாழ்ந்தாலும் சரி; உங்களைப் போலத்தான் அவர்களும். அவர்களும் கஷ்டப்படுகிறார்கள்; நீங்களும் கஷ்டப்படுகிறார்கள். உளவியல்ரீதியாக நீங்கள்தான் உலகம். உலகம்தான் நீங்கள். எனவே உங்களுக்கு மகத்தான பொறுப்பு இருக்கிறது. அடுத்த அத்தியாயத்தில் புத்தகம் இப்படிக் கூறுகிறது. கற்பனைக்கு எட்டாத தொன்மையான காலத்திலிருந்தே மனிதன் பயத்துடன்தான் வாழ்ந்துகொண்டிருக்கிறான். இயற்கை பற்றிய பயம், சூழல் குறித்த பயம், நோயைக் கண்டு பயம். . . விபத்துகள் பற்றிய பயம் என்று பலவித பயங்கள் . பயம் மனதில் ஆழமான அடுக்குகளில் உறைந்திருக்கிறது. ஆழமான, நாம் அறியாத, பயம் நம்முள் இருக்கிறது. 'இந்தப் பயத்தை உன்னிப்பாகக் கவனியுங்கள். அதற்கு ஒரு முடிவு கட்ட உங்களால் முடியும்' என்று இந்த அத்தியாயத்தின் முதலில் கூறப்பட்டிருப்பதைப் பார்ப்போம். பயம் என்றால் என்ன? என்பதையும் இந்தப் புத்தகம் அடுத்த பக்கத்தில் சொல்கிறது. பயம் என்றால் என்ன, அது எப்படி உருவாகிறது? அதன் இயல்பு என்ன? இந்தப் பிரச்னையை மனிதன் ஏன் இன்னும் தீர்க்கவில்லை? ஏன் அவன் பயத்துடனேயே வாழ்கிறான்? அதற்கு அவன் தன்னைப் பழக்கப்படுத்திக்கொண்டு விட்டானா? அதை ஒரு வாழ்க்கை முறையாக ஏற்றுக்கொண்டு விட்டானா? மனம் அச்சத்திலிருந்து முழுமையாக விடுதலை பெறும் விதத்தில் இந்தப் பிரச்னையை அவன் ஏன் தீர்க்கவில்லை? அச்சம் இருக்கும் வரை உங்கள் வாழ்க்கை இருட்டில்தான் இருக்கும். உங்கள் வழி அந்த இருட்டிலிருந்துதான் பிறக்கிறது. எனவே அது முற்றாக அர்த்தமற்றது.
பயத்தின் இயல்பு பற்றி மேலும் படிக்க வேண்டியது மிகவும் அவசியம். பயம் எப்படி உருவாகிறது? அது கடந்த கால நிகழ்வுகளின் ஞாபகம். ஏதோ ஒரு வலியின் ஞாபகம். செய்யக்கூடாத ஏதோ ஒன்றைச் செய்ததன் ஞாபகம். நீங்கள் சொன்ன ஒரு பொய்யை யாரும் கண்டுபிடித்துவிடக்கூடாது என்று நினைக்கிறீர்கள்; ஆனால் கண்டுபிடித்து விடுவார்களோ என்று பயப்படுகிறீர்கள். உங்களது ஏதேனும் ஒரு செயல் உங்கள் மனதை மாசுபடுத்தியிருக்கும். அந்த மாசுபாட்டை அல்லது அந்தச் செயலை நினைத்து நீங்கள் பயப்படுகிறீர்கள். எதிர்காலத்தை நினைத்து பயப்படுகிறீர்கள். வேலை போய்விடுமோ என்று நினைத்துப் பயப்படுகிறீர்கள். அல்லது நாட்டின் ஏதோ ஒரு மூலையில் ஒரு முக்கியமான குடிமகனாக முடியவில்லையே என்பதை நினைத்து. அச்சம் நம்முள் பல வடிவங்களில் உள்ளது. சிலருக்கு இருட்டைக் கண்டு பயம். சிலருக்கு சமுதாயத்தின் கருத்தை எண்ணிப் பயம். மரணத்தைக் கண்டு பயம். திருப்திப்படுத்த முடியாதது குறித்துப் பயம். இதுதவிர, நோயைக் கண்டு பயம். உடலில் அசாத்தியமான வலி ஒருவருக்குஇருக்கலாம்.அந்த வலி மனதில் பதிந்து விடுகிறது.அது திரும்பி வந்து விடுமோ என்ற அச்சம் ஒருவருக்கு ஏற்படுகிறது. எனவே இந்தப் புத்தகம் நம்மை மேற்கொண்டு படிக்கச் சொல்கிறது. பயம் என்பது என்ன? அது எண்ணத்தின் மூலம் வருகிறதா? அது காலத்தின் மூலம் வருகிறதா?
தமிழில்: அரவிந்தன்

0 கருத்துகள்