Advertisement

Responsive Advertisement

சைவமா? வைணவமா? (பகுதி 2) - சத்குரு பதில்!


நாங்கள் ஈஷா என்ற பெயரை மிகவும் கவனமாகத் தேர்வு செய்ததற்குக் காரணமே ஈஷா என்றால் வடிவற்ற தெய்வீகத் தன்மை என்பதுதான். நீங்கள் அதை அனுபவ பூர்வமாக உணரமுடியுமே தவிர உங்களை அதனுடன் அடையாளப் படுத்திக் கொள்ள முடியாது. எனவே என் மனதில் ஒரு குழுவுடன் சேர்ந்து கொள்வதோ அல்லது பல்வேறு குழுக்களுடன் சேர்ந்து கொள்வதோ தோன்றுவதே இல்லை. 

எப்போது நீங்கள் ஒன்றை உங்களிடம் இருந்து வேறுபடுத்திப் பார்க்கின்றீர்களோ அப்போதுதான் அவற்றை உங்களுடன் சேர்த்துக் கொள்ளும் கேள்வி உருவாகும். எப்போது நீங்கள் உங்கள் முன்னால் இருப்பதை உங்களில் இருந்து வேறுபடுத்தி உணரவில்லையோ அப்போது அதை உங்களுடன் சேர்த்துக் கொள்வது என்ற கேள்விக்கே இடமில்லை. ஆன்மீகத் தன்மையின் அடிப்படையே இதுதான். எப்போது நீங்கள் எல்லாவற்றையுமே உங்களில் ஒரு பகுதியாக அனுபவபூர்வமாக உணரத் தொடங்குகிறீர்களோ அப்போதுதான் நீங்கள் ஆன்மீகத்தை உணர்கிறீர்கள்.

இன்றைய விஞ்ஞானம் இந்த உலகம் முழுமையுமே ஒரே சக்திதான் என்பதை சந்தேகத்துக்கிடமின்றி நிரூபித்துள்ளது. அதில் எந்த சந்தேகமும் இனி இல்லை. எந்த சக்தி தன்னை இங்கே மண்ணாக வெளிப்படுத்திக் கொள்கின்றதோ அதே சக்திதான் அங்கே மரமாக நிற்கின்றது, ஒரு நாயாக குரைக்கிறது, இங்கு உட்கார்ந்திருக்கும் நீங்களாகவும் இருக்கிறது, நீங்கள் வணங்கும் கடவுளாகவும் உள்ளது.

உங்கள் மதங்கள், நீங்கள் எந்த மதத்தில் இருந்து வந்தாலும் சரி, இதையேதான் கடவுள் எங்கும் இருக்கிறார் என்று உரக்கச் சொல்கின்றன. கடவுள் எங்கும் இருக்கின்றார் என்பதும், எல்லாமே ஒரே சக்திநிலைதான் என்பதும், ஒன்றுதானே, இல்லையா? இதைத்தான் ஐன்ஸ்டீன் 'E' என்று சொன்னார், நாம் ‘ஈஷ்வரா' என்று சொல்கிறோம். அவை வேறுபட்டதல்ல.

எனவே எல்லாமே ஒன்று என்னும்போது நீங்கள் ஏன் அதை அனுபவபூர்வமாக உணர முடியவில்லை? மற்றவற்றுடன் ஒப்பிட்டு உணரும் ஐம்புலன்களின் தன்மைக்கு நீங்கள் அடிமையாக இருப்பதால்தான் அதை உங்களால் உணர முடியவில்லை. 

இருட்டைப் பார்த்த பின்னர்தான் வெளிச்சத்தை உணர முடியும். அது கண்களின் இயல்பான தன்மை. சத்தமில்லாத சூழ்நிலையை நீங்கள் உணர்ந்தால்தான் இப்போது நீங்கள் சத்தத்தைக் கேட்க முடியும். என் உடல் வெப்பமாக இருப்பதால்தான் இந்தக் கம்பி குளிர்ச்சியாக இருப்பதை என்னால் உணர முடிகிறது. உங்கள் அனுபவத்தில் ஐம்புலன்களின் வாயிலாக உணரும் எது ஒன்றுமே வேறேதோ ஒன்றுடன் ஒப்பிடும் தன்மையில்தான் உள்ளது. எப்போது நீங்கள் ஐம்புலன்களின் உணரும் தன்மைக்கு அடிமையாகி விட்டீர்களோ அப்போது நீங்கள் இந்த உலகத்தை லட்சக் கணக்கான துண்டுகளாகத்தான் உணரமுடியும். நீங்கள் படைப்பின் ஒன்றுபட்ட தன்மையைப் பார்க்க முடியாது.

இப்போது நீங்கள் ஐம்புலன்களின் தன்மையைக் கடந்து விட்டீர்கள் என்றால் இயல்பாகவே எல்லாவற்றையும் உங்களில் ஒரு பகுதியாக உங்களால் அனுபவபூர்வமாக உணரமுடியும். எப்போது நீங்கள் எல்லாவற்றையும், எல்லோரையும் உங்களில் ஒரு பகுதியாக உணர்கிறீர்களோ அப்போது இங்கு நீங்கள் எப்படி வாழ வேண்டும் என்று உங்களுக்கு யாரும் சொல்லித் தர வேண்டியது இல்லை. 

நல்லவராக எப்படி இருக்க வேண்டும் என்றும் யாரும் சொல்ல வேண்டியது இல்லை. நீங்கள் பிறந்ததிலிருந்தே மக்கள் உங்களுக்கு நல்லவனாக இரு, அவருக்குக் கெடுதல் செய்யாதே, அவரைக் கொலை செய்யாதே, அவரிடம் திருடாதே என்றெல்லாம் நீதி போதனைகளைச் சொல்லிக் கொடுத்து இருக்கிறார்கள். நீங்கள் எப்போது மக்கள் எல்லாரையும் உங்களில் ஒரு பகுதியாக உணர்கிறீர்களோ அப்போது உங்களுக்கு மற்றவர்களின் நீதிபோதனை தேவையா? அதுதான் ஆன்மீகம். உங்கள் உடல் சார்ந்த தன்மையைத் தாண்டி உணர்ந்தபின் நீங்கள் எந்தக் குழுவையும் சார்ந்தவராக இருக்கமுடியாது. எது எல்லா இடத்திலும் இருக்கிறதோ அதனுடன் நீங்கள் எதனை ஒப்பிட முடியும்? எப்போது அதை எதனுடனும் ஒப்பிட முடியாதோ அப்போது அதை ஐம்புலன்களின் துணை கொண்டு நீங்கள் உணர முடியாது.

ஒரு சமயம் தத்துவ மீன் ஒன்று இருந்தது. என்ன? தத்துவம் பேசும் மீனா?

-தொடரும்...

கருத்துரையிடுக

0 கருத்துகள்