Advertisement

Responsive Advertisement

வாழ்க்கை என்ற புத்தகம் - 5 - ஜே.கிருஷ்ணமூர்த்தி


அடுத்தபடியாக, இந்தப் புத்தகத்தை நீங்கள் எப்படிப் படிக்கிறீர்கள்; புத்தகத்திலிருந்து நீங்கள் விலகி நிற்கிறீர்களா என்ற பிரச்னை எழுகிறது. ஒரு நாவல் அல்லது த்ரில்லரைப் படிக்கும்போது நீங்கள் அந்தப் புத்தகத்திற்கு வெளியே இருக்கிறீர்கள். விறுவிறுப்பாக இருக்கிறது. பக்கங்களைத் திருப்பிக் கொண்டே போகிறீர்கள். ஆனால் இங்கே வாசிப்பதுதான் புத்தகம். தனக்குள் இருக்கும் ஒரு அம்சத்தையே அவர் படிப்பது போல அவர் அந்தப் புத்தகத்தைப் படிக்கிறார். மற்ற புத்தகங்களைப் படிப்பது போல அல்ல இது. மனிதன் பல அதிகாரங்களுக்குட்பட்டு வாழ்வதை இந்தப் புத்தகம் சொல்கிறது. அரசியல், மதம், தலைவன், குரு, அறிவுஜீவி, தத்துவ ஞானி என்று பலவித அதிகாரங்கள். மனிதன் எப்போதும் ஏதோ ஒரு அதிகாரத்திற்குக் கட்டுபட்டே வாழ்கிறான். இந்தப் புத்தகம் என்ன சொல்கிறது என்று உன்னிப்பாக கவனியுங்கள். சட்டத்தின் அதிகாரம் இருக்கிறது. நீங்கள் சட்டத்தை ஏறறுக் கொள்கிறீர்களோ இல்லையோ, சட்டத்தின் அதிகாரம் இருக்கத்தான் செய்கிறது. போலீஸ்காரரின் அதிகாரம் இருக்கிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் அதிகாரம், சர்வாதிகாரியின் அதிகாரம். . . நாம் இப்போது அதிகாரத்தைப் பற்றிப் பேசவில்லை. பாதுகாப்புக்காக நமது மனம் நாடும் அதிகாரத்தைப் பற்றி இந்தப் புத்தகம் கூறுவதைப் படித்துக்கொண்டிருக்கிறோம்.

நமது மனம் எப்போதும் பாதுகாப்பை நாடுகிறது. நீங்கள் மனரீதியாக பாதுகாப்பை நாடும்போது தவிர்க்க முடியாமல் அதிகாரத்தை உருவாக்கியே தீருவீர்கள். மதகுருமாரின் அதிகாரம், பிம்பங்களின் அதிகாரம், 'நான் அறிஞன். நான் சொல்வதைக் கேளுங்கள்' என்று சொல்லும் மனிதனின் அதிகாரம். எனவே எல்லாவிதமான அதிகாரத்திலிருந்தும் விடுதலை பெறுங்கள் என்கிறது இந்தப் புத்தகம். அதாவது, உங்களுக்கு நீங்களே விளக்காக இருங்கள் என்று சொல்கிறது. வாழ்க்கையைப் புரிந்துகொள்ள, இந்தப் புத்தகத்தைப் புரிந்து கொள்ள யாரையும் சார்ந்திருக்காதீர்கள். இந்தப் புத்தகத்தைப் படிக்க உங்களுக்கும் இந்தப் புத்தகத்துக்கும் நடுவே யாரும் தேவையில்லை. தத்துவ ஞானி, மதத்தலைவர், குரு, கடவுள். . . யாரும் தேவையில்லை. நீங்கள்தான் இந்தப் புத்தகம். நீங்கள்தான் அதைப் படித்துக் கொண்டிருக்கிறீர்கள். எனவே இன்னொருவரின் அதிகாரத்திலிருந்து நீங்கள் விடுதலை பெற வேண்டும். அது கணவன் அல்லது மனைவியின் அதிகாரமாக இருந்தாலும் சரி. உங்களால் சொந்தக் காலில் நிற்க முடிய வேண்டும். 

- தொடரும்...

தமிழில்: அரவிந்தன்

கருத்துரையிடுக

0 கருத்துகள்